×

தொப்பையால் வரும் முதுகு வலி

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

துரத்தியடிக்க எளிய வழி!

சமீபத்தில் ஒல்லியான அதேநேரம், தொப்பை கொஞ்சம் கூடுதலாக இருந்த நாற்பதைத் தாண்டிய பெண் ஒருவர் என்னிடம் முதுகு வலிக்காக வந்திருந்தார். அவர் நடக்கும்போதும், நிற்கும் போதும் தன்னை அறியாமலேயே கர்ப்பிணிப் பெண்கள் போன்று வயிற்றை முன் தள்ளி நின்று கொண்டிருந்தார்.இந்த முதுகு வலிக்குக் காரணம் அவரது தொப்பைதான் என்று சொல்லி, அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் வழங்கினேன்.

இப்போது அவருக்கு முதுகு வலி குணமடைந்து தொப்பையை குறைப்பதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறேன். பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களுக்கும் தொப்பை இருப்பதால் நிறைய பாதிப்புகளுக்கு உள்ளாகி முதுகு வலியில் முடிகிறது என்பதால், இரு பாலாருக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

புவியீர்ப்பு விசையும் அதன் மையமும்…

‘Center of Gravity’ என்று சொல்லப்படும் மைய புவியீர்ப்பு விசை என்பது ஒரு பொருளின் மையத்தில் அந்தப் பொருளின் மொத்த எடையும் கூடுவது எனச் சொல்லலாம். இது எல்லா பொருட்களுக்கும், உயிரினங்களுக்கும் உள்ளது. அதாவது, நாம் தரையில் அமரும்போது சி.ஓ.ஜியாக நம் புட்டமும் கால்களும் அமையும். இதுவே ஒரு நாற்காலிக்கு நான்கு கால்களும் சி.ஓ.ஜியாக அமையும். இப்படி ஒவ்வொரு பொருளும் அதன் வடிவம் மாறும்போது அதற்கான சி.ஓ.ஜியும் மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும்.

ஏன் சி.ஓ.ஜி முக்கியம்…?

சி.ஓ.ஜி நம் ஸ்திரத் தன்மையோடு (Balance) சம்மந்தப்பட்டது. நாம் எழுந்து நின்றால் சி.ஓ.ஜி நம் கால்களில் அமையும். இதனால்தான் உடல் நலம் சரியில்லாத நபரால் நிற்க முடியாமல் ஸ்திரத் தன்மை இழந்துவிடுவர். இதுவே அவர்களால் ஸ்திரத் தன்மையோடு உட்கார முடியும். ஏனெனில் சி.ஓ.ஜி ஏற்கனவே சொன்னது போன்று புட்டம், தொடை, கால்கள் என அகல இடத்தினைக் கொண்டிருக்கும்.

முதுகு வலி…

சரி, சி.ஓ.ஜி-க்கும் முதுகு வலிக்கும் என்ன சம்பந்தம் எனப் பார்ப்போம். நாம் நேராக நிற்கும்போது சி.ஓ.ஜி இடுப்பு எலும்பில் ஆரம்பித்து நேர்க்கோடாக கீழே வரும். ஆனால், தொப்பை அதிகம் உள்ளவர்களுக்கு சி.ஓ.ஜி முன் நோக்கி அமையும். இதனால் அவர்கள் ஸ்திரத்தன்மைக்காக இடுப்பை முன்நோக்கியும் உடலை பின் நோக்கியும் வைத்து நடக்க ஆரம்பிப்பார்கள்.

இன்னும் சிறந்த உதாரணமாக கர்ப்பிணிப் பெண்களை சொல்லலாம். கருவில் குழந்தை வளர வளர வயிறு முன்னோக்கியும் முதுகுப் பகுதியில் தண்டுவட எலும்புகள் ‘C’ போல வளைந்தும் ஸ்திரத் தன்மைக்காக மாற்றம் ஏற்பட்டு காணப்படும். இதன் விளைவாக முதுகு வலி ஏற்படும்.

இயன்முறை மருத்துவம்…

தொப்பை இருப்பவர் அல்லது கர்ப்பிணிப் பெண்கள் முதுகு வலி வருவதற்கு முன்பே தங்கள் குடும்ப இயன்முறை மருத்துவரிடம் சென்று நிலைமையை சரி செய்யலாம். இயன்முறை மருத்துவர் ஒருவரது உடல் தோரணையை (Posture) முழுதும் பரிசோதனை செய்து, அதற்கேற்ப உடற்பயிற்சிகள் வழங்குவார்கள்.

வயிற்று தசைகளை உறுதியாக்க தசை வலிமை பயிற்சிகள் பரிந்துரைத்து கற்றும் கொடுப்பர். முதுகு தசைகள் இலகுவாக (Flexible) மாற தனிப் பயிற்சிகள் வழங்குவர். மேலும், தொப்பை குறைக்கவும் பயிற்சிகள் வழங்கப்படும்.

தரவுகளின் தகவல்கள்

* இந்தியாவில் கிராமப்புறங்களை காட்டிலும் நகரத்தில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும்தான் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு சத்து (தொப்பை) அதிகம் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.

* சர்க்கரை நோய், இதய நோய், கல்லீரலில் கொழுப்பு என பல நோய்களின் மூலக் காரணமாக தொப்பையே கருதப்படுகிறது.

* இடுப்பு சுற்றளவு பெண்களுக்கு 35 இன்ச்கள் மேலேயும் ஆண்களுக்கு 40 இன்ச்கள் மேலும் இருந்தால் அவர்களுக்கு வாழ்வியல் சார்ந்த நோய்களான பி.சி.ஓ.டி, சர்க்கரை நோய், அதிக கொழுப்பு அளவு என பலப் பிரச்னைகள் வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

* இந்தியாவில் ஆண்களை விட பெண்களுக்கே அதிக கொழுப்பு சத்து வயிற்றை சுற்றி படிகிறது எனக் கருதப்படுகிறது.

* இந்தியாவில் பத்தில் ஐந்து பெண்களுக்கு வயிற்றின் சுற்றளவு கொழுப்பு படிவதால் அதிகமாகிறது என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

எனவே, ‘சாதாரண தொப்பை தானே’ என லேசாக விட்டுவிட்டு முதுகு வலியால் பின்னால் பெரிதாக அவதிப்படாமல், ஆரம்பத்திலேயே அதனை சரி செய்து நம் உடலினை பாதுகாக்கலாம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு அதன்படி நிற்பதே சாலச் சிறந்ததாகும்.

The post தொப்பையால் வரும் முதுகு வலி appeared first on Dinakaran.

Tags : Saffron Gomati ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...